Sunday, 29 December 2013

கண்ணில் வரும் காட்சி எல்லாம்....


அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
 
முதல் இரண்டு வரிகளின்பொருளை திருவனந்தபுரத்தில் இருந்து குளத்துப்புழை, தென்மலை வழியாக குற்றாலம் செல்லும் பாதையில் கண்கூடாகக் காணலாம்.(கடைசி இரண்டு வரிகளின் பொருளை எங்கேயும் எப்போதும் காணலாம். விடை மட்டும் தான் கிடைக்காது).
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியாகக் குற்றாலம் போயிருந்தேன். வழக்கம் போலவே ஒரு அற்புதமான அனுபவம். அடர்ந்து கறுத்த மேகக்கூட்டம் எங்கே கம்பி போன்ற மழைத் துளிகளாய் உரு மாறுகிறது என்றே தெரியாத கண் கொள்ளாக் காட்சி. திடீரென மேகங்கள் விலகி பச்சைப் பட்டு விரித்த மலைகளின் ஒரு பகுதியில் மட்டும் சூரிய வெளிச்சம் பட்டுப் பிரகாசமாகவும், ஒரு பகுதி மேகத்தின் நிழலிலும் காணப்படும் அழகை எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும். வர்ணிக்கத் தெரியாது. மழையில் குளித்த மலைப் பாறைகளில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி சலசலத்து விழுவது கண்களுக்கும் காதுகளுக்கும் இன்பம்

நான் ஆரியங்காவில் பணி புரியும் போது, அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரண்டு மூன்று நாட்களுக்கான பண்டங்களைச் செய்து வைத்து விட்டு 10, 7 வயது பிள்ளைகளைத் தந்தையிடம் விட்டு விட்டு, 6 மணி பஸ்ஸிற்கு ஓடி, டீஸல் தகராறு காரணம் பஸ் கான்ஸல் ஆகி 7 மணி பஸ் break down ஆகி 8 மணி பஸ் பிடித்து லேட் ஆகித், தாளாத மனக்கவலையுடன் செல்லும் போது என் மனக்கவலைக்கு அரு மருந்தாக இருந்தது இந்த அற்புதக் காட்சிகள் தான் என்பதில் சந்தேகமே இல்லை.
அது போகட்டும்.. இப்போது இந்தப் பயணத்தில் என் கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம்..சைக்கிளில் புத்தகப்பையை வைத்துக்கொண்டு கம்பீரமாகப் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள்.. TVS-50 இல் விவசாயப் பொருட்களைச் சுமந்து செல்லும் பெண்கள்... தனியாகப் பஸ்ஸிலும் மினி பஸ்ஸிலும் டவுனுக்குத் தனியே போய் தேவையானதை வாங்கி வரும் பெண்கள்... என நம்பிக்கை தரும் காட்சிகள்.
அப்படிப் பயணிக்கும் போது நிற்கும் பெண்களிடமிருந்து குழந்தைகளை வாங்கி வைத்துக் கொள்வதும் அக்குழந்தைகளின் தலையோ உடையோ கலைந்திருந்தால் தங்கள் குழந்தையாகப் பாவித்து சரி செய்து விடுவதும் bonus காட்சிகள்..
சமீப காலங்களில் கிராமத்துப் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றங்களுக்கான காரணங்களைப் பட்டியல் இட்டால் இந்த வரிசையில் இருக்கும்.
1. சைக்கிள் 
2. TVS-50 
                                
3. சுய உதவிக் குழுக்கள்
                                     
 
இவை மூன்றும் கிராமத்துப் பெண்கள் சொந்தக் காலில் நிற்பதற்குப் பேருதவி புரிகின்றன.
    1. சைக்கிள்.. பதின் பருவப் பெண் குழந்தைகளும் தமது ஊரில் உயர் நிலைப் பள்ளி இல்லாவிடினும் அடுத்த ஊர் சென்றாவது படிக்கத் துணை புரியும் ஒரு துணைவன்.
    2. TVS-50.. விவசாய விளை பொருட்களை அடுத்துள்ள சந்தைகளில் கொண்டு விற்று நல்ல விலை பெற உதவுகின்றன.
  1. சுய உதவிக் குழுக்கள்.. பெண்களை சொந்தக் காலில் நிற்பதற்கும் பணப் பரிமாற்றம் நடத்துவதற்கும் அலுவலகங்களிலும் பாங்குகளிலும் சென்று நம்பிக்கையுடன் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தைரியம் உடையவர்கள் ஆக்கவும் உதவுகின்றன.
இவை எல்லாம் நம்பிக்கை தரும் நல்ல காட்சிகள் என்றாலும் மாற்றம் இல்லாத, நம்மை நாணித் தலை குனிய வைக்கும் ஒரு காட்சியைப் பற்றிக் கூறாமல் இதை நிறைவு செய்ய முடியாது.
வயலோரங்களிலும் ரயில் பாதை நெடுகவும் காலை நேரங்களில் ஆண்கள் ஒதுங்கும் காட்சி. பெண்கள் ஒதுங்குவதை நல்ல வேளை பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அதி காலை எழுந்து, முடியும் வரை மற்றவர் கண்களில் படாமல் தங்கள் காரியத்தை முடித்துக் கொள்ளும் திறன் பெற்றவர்கள். மூன்று நாட்களிலும், முப்பது நாட்களிலும். பூட்டிய கதவின் உள்ளே நமக்குக் கிடைக்கும் தனிமை அவர்களுக்கு அந்நியம். அந்த வலி நமக்கு ஒரு போதும் முழுமையாகப் புரியாது.
எதற்கெல்லாமோ போராடுகிறோம். நாம் நினைத்தால் இந்த அவலத்தை மாற்ற முடியாதா? ஒரு பெண்ணின் தலைமையில் இருக்கும் அரசாங்கம் நினைத்தால் தீர்வு காண இயலாதா? தலை குனியாமல் இயற்கையின் தேவைகளை நிறைவேற்ற அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க முடியாதா?
இதை எல்லாம் தாண்டிக் குற்றாலம் சென்று அருவியில் குளிப்பது... ஆஹா என்ன சுகம்.. முடிந்தால் பிறகு சொல்கிறேன்.

No comments:

Post a Comment