Monday 1 May 2023

மாம்பழ மகாத்மியம்



மாம்பலத்தில் மாம்பழ நினைவுகள்


நான் பாட்டி வீட்டிலிருந்து இரண்டாவது  மூன்றாவது படித்துக் கொண்டிருந்த சமயம். மாம்பழக் காலம் வந்து விட்டால் போதும். கொண்டாட்டம் தான். வேலை விஷயமாக அடிக்கடி பெங்களூர் போகும் சித்தப்பா பெரிய பெரிய மாம்பழங்களாக வாங்கி வருவார். பெரியப்பா பெண்கள், நான், என் அக்கா என ஐந்து குழந்தைகள். 

ஆளுக்கு ஒரு  பெரிய மாம்பழத்தைக் கொடுத்து விடுவார்கள். தோல் கூட நறுக்குவதில்லை. அப்படியே சாப்பிடுகிற சுகமே தனி. மாம்பழக் காலம் என்றாலே ஈக்களின் காலமும் கூட. எனவே வீட்டுக்கு பின்புறம் முற்றத்தில் இருந்து சாப்பிட வேண்டும். தரையைக் கழுவி விடுவது சுலபம். அப்படி ஒரு முறை சாப்பிடும் போது ஒரு காகம் வந்து பழத்தையும் பறித்து என் கையையும் கொத்தி விட்டுப் போயிற்று. நடந்தது 1960,61இல். அந்தத் தடம் இப்போதும் என் கையில் உள்ளது. நினைவுகள் மனதிலும். அதனால் ஒன்றும் அயர்வதில்லை. இப்போதும் முழுதாக ச் சாப்பிடுவதே பிரியம்.


மதுரையில் மாம்பழம்.


இரண்டு வருட சென்னை வாசத்துக்குப் பின் பெற்றோருடன் மதுரை. என்றென்றும் மதுர நினைவுகள் தரும் மதுரை. 

மதுரையில் அதிகம் கிடைப்பது கிளி மூக்கு மற்றும் காசாலட்டு மாம்பழங்கள். கிளி மூக்கு பெரியதாக இருக்கும். பெரிய குடும்பத்துக்கு ஏற்றது. சோடை போகாது. மிதமான இனிப்பு. காசாலட்டு லட்டு தான் பெயரைப் போலவே. மிகவும் நன்றாக இருக்கும். இனிக்கும். தோல் மட்டும் கட்டியாக இருக்கும். கசக்கும். செருப்பு போன்ற தோல் என்பார் அம்மா. செருப்பை சுவைத்துப் பார்த்ததுண்டா என்று நக்கல் செய்வான் தம்பி.


வந்த இடம் நல்ல இடம்


திருவனந்தபுரம் வந்த பிறகு வெள்ளாயணி மற்றும் கோட்டுக்கோணம் வகைகள். நல்ல சுவை. பல வருட பழக்கத்தில் மற்ற வகைகள் கிட்டத்தட்ட மறந்த நிலை.  எப்போதாவது மாம்பழக் காலத்தில் சேலம் செல்ல நேர்ந்தாலோ இளைய தம்பி அங்கிருந்து வந்தாலோ மல்கோவா மற்றும் சேலம் ஜில்லா மாம்பழ பாக்கியம்.


மும்பையும் மாம்பழமும்


பிறகு சில வருட மும்பை வாசம். அம்மம்மா.

எத்தனை வகை மாம்பழங்கள். ரத்னகிரியிலிருந்து அல்போன்சா, குஜராத்திலிருந்து கேசர், கர்நாடகத்திலிருந்து பதாமி, ஆந்திராவிலிருந்து நீலம், பங்கனப்பள்ளி உ.பியிலிருந்து சில வகைகள் என்று தொடரும். காய் வாங்க போனால் மாம்பழங்கள் வாங்காமல் வந்ததில்லை. மூன்று மாதமும் காலை மாலை எந்நேரமும் மாம்பழங்கள் உணவின் பாகம். சாப்பிட அடம் பிடிக்கும் பேத்தி நவ்யா கூட மாம்பழம் இருந்தால் விரைவில் சாப்பிட்டு விடுவாள்.

மாம்பழக் காலம் தீர்ந்தால் என்ன செய்வது. அதற்கும் வழி உண்டு. மாம்பழ அப்பளம் (mango papad) செய்து விற்கிறார்கள். இளைய தம்பிக்கு மிகவும் பிடிக்கும். மாதக் கணக்கில் வைத்திருந்து(தீராமல் இருந்தால்) சாப்பிடலாம். Mango purée செய்து வைக்கலாம். மாம்பழத்தின் சதைப் பகுதியை மட்டும் பக்குவப்படுத்தி பாதுகாத்தல். ஒருமுறை அகமதாபாத்தில் குடும்ப நண்பர் வீட்டில் அதை  ஆறு மாதம் வைத்திருந்து பழச்சாறாகத் தந்தார்கள். மிக அருமையாக இருந்தது. ஆனால் அதெல்லாம் சொந்த மாந்தோப்பு இருப்பவர்கள் செய்யும் வேலை. என்னைப் போல கடையில் வாங்கி கடாயில் வைப்பவர்களுக்கானது அல்ல. மாம்பழக் காலமா மனமார வாங்கி பழமாக, சாறாக வித விதமாக அனுபவிக்கணும். அது கழிந்தால் இருக்கவே இருக்கு தொடரும் ஆப்பிள், ஆரஞ்சு காலம். இருந்தாலும் மாம்பழம் மாம்பழம் தான். சும்மாவா சொல்கிறார்கள் பழங்களின் ராஜா king of fruits என்று.