Monday, 11 April 2022

Thiruvannamalai 2022

 


5th and 6 th April 2022

திருவண்ணாமலை

சிவபெருமானே ஜோதிலிங்கமான
அருணாச்சல மலை வடிவில் காட்சியளிக்கும் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பிரம்மாண்டமான கோவில். இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் நாற்றிசையிலும் உள்ள நுழைவாயில் கோபுரங்கள் உள்பட ஒன்பது கோபுரங்கள். அருணாச்சலேஸ்வரர் உண்ணாமுலையம்மன் என இரண்டு பிரதான சந்நிதிகளும் பல சிறிய சந்நிதிகளும் அக்னி தீர்த்தம் என்ற மிகப்பெரிய குளமும் அமையப் பெற்றது. கி பி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விரிவாக்கம் ஒன்பது, பதினைந்தாம் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்தது.

தேவாரத்தில் நாயன்மார்களால் பாடப்பட்ட பாடல்பெற்ற ஸ்தலம். மாணிக்கவாசகர் திருவெம்பாவை எழுதிய ஸ்தலம். அருணகிரிநாதர் முருகன் அருள்பெற்று முருகனால் முதலடி எடுத்துத்தரப்பெற்று முத்தைத்தரு எனத்தொடங்கி திருப்புகழ் பாடிய ஸ்தலம். இவ்வாறு பல பெருமைகள் உள்ள ஸ்தலம்.

மகாவிஷ்ணு பிரமன் இருவரும் இறைவனைக் காண புறப்பட்டனர். விஷ்ணு வராஹமாக உருவெடுத்து திருவடி தேடியும் பிரமன்  அன்னபட்சி உருவில் திருமுடி தேடியும் ஆதியும் அந்தமும் இல்லா சிவனை, லிங்கோத்பவனைக் காணப் புறப்பட்ட இடம் என்றும் சொல்லப்படுகிறது.
தொன்மையான வரலாற்றுச் சிறப்புள்ள இடங்களில் வழக்கம்போல கதைகளும் புனைக்கதைகளும் நிறைந்தே காணப்படுகிறது.

ராஜகோபுரம் எனப்படும் கிழக்கு கோபுரம் மிகப்பெரியது. 217 அடி உயரம். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்தது. இதன் வழியாக உள்ளே நுழைந்தால் பெரிய நந்தி, சிறிய நந்தி, பாதாள லிங்கம் ஆகியவை தரிசித்து அக்னி தீர்த்த குளத்தையும் கண்டுவிட்டு சுவாமி சந்நிதி தொடர்ந்து அம்மன் சந்நிதியில் தரிசிக்கலாம். பிரகாரங்களுக்கு வெளியே ஸ்தல விருட்சமான மகிழமரச் சுவட்டில் ஒன்பது கோபுரங்களையும் தரிசிக்கும் இடம் இருக்கிறது. எல்லா கோபுரங்களும் அழகிய வேலைப்பாடமைந்த சிற்பங்களுடன் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன. பின்புலத்தில் கம்பீரமாக அருணாச்சல மலை. விசேஷ நாட்கள் முகூர்த்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் கூட்டம் அதிகம் இல்லை. அமைதியாக தரிசனம் செய்து வரலாம்.

கிரிவலம்
ஆண்டவனே லிங்க வடிவில் மலையாக அமர்ந்திருப்பதாக நம்பப்படுவதால் கிரிவலம் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. 14 கிமீ சுற்றளவு. காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டால் கடும் வெயிலுக்குமுன் சுற்றி முடிக்கலாம். அல்லது மாலை நான்கு மணியளவில் தொடங்கி முன்னிரவில் தீர்க்கலாம். முன்பு பௌர்ணமி தினங்களில் மட்டுமே அதிக ஆட்கள் பங்கெடுக்கும் நிகழ்வாயிருந்தது. இப்போது எல்லா நாட்களிலும் சௌகரியம் உள்ளது. கிரிவலப் பாதை முழுதும் நன்கு சாலைகள் அமைக்கப்பட்டு இருபுறமும் நிறைய மரங்கள் வளர்த்துள்ளனர். நடைபாதை சீரமைக்கப்பட்டு  அமர்ந்து இளைப்பாற ஆங்காங்கே பெஞ்சுகள் அமைக்கப் பட்டுள்ளது. சிரம பரிகாரத்துக்கு இளநீர் மற்றும் குளிர்பானக் கடைகள் வழிநெடுக உள்ளன. எனவே நடக்கும் சிரமம் தொரியாமல் அவ்வப்போது ஓய்வெடுத்து நிதானமாகச் செல்லலாம். அவ்வளவு தூரம் நடக்க முடியாதவர்கள் ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்வதுண்டு.
நாங்கள் மாலை நான்கு மணிக்குத் தொடங்கி எட்டு மணியோடு முடித்துக் கொண்டோம். அவ்வளவு தூரம் ஒரே நேரம் நடக்க முடியுமா என்ற சந்தேகத்துடன் தொடங்கினாலும் தடையின்றி முடித்தபோது மனநிறைவாக இருந்தது.

ரமணாசிரமம்

மறுநாள் காலை ரமணாசிரமம் சென்றோம்.
1922 இல் தாயாரின் மறைவுக்குப் பின் திருவண்ணாமலையில் மலையடிவாரத்தில் தங்கிய ரமண மகரிஷி அதன்பின் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே வாழ்ந்து சமாதியடைந்தார். அதன்பின் அவரது சீடர்களால் ஆசிரமம் உருவாக்கப்பட்டது. சமாதி கோவில் போலப் பாதுகாக்கப் படுகிறது. இன்று மரங்கள் சூழ்ந்த பெரிய நிலப்பரப்பில் வாசகசாலையுடன் அமைதியான ஆசிரமமாகப் பரந்து நிற்கிறது. உள்மனத் தேடலுக்கான தியானம் செய்ய ஏற்ற இடம். உள்நாட்டு வெளிநாட்டு சீடர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.

மேற்கொண்ட பயணம் தடைகளின்றி இனிதே நிறைவுற்றது.