Tuesday, 8 March 2022

பெண் சாதனையாளர்கள்

 சென்ற மாதம் திருநெல்வேலியிலிருந்து பத்தமடைக்கு பஸ்ஸில் செல்லும்போது பக்கத்து சீட்டில் ஒரு மூதாட்டி. பலகாலம் வெட்டவெளியில் வெயில் காய உழைத்தவர் என்பதை உலர்ந்து, சுருங்கி, கறுத்த சருமம் பறைசாற்றியது. அதேசமயம் அனுபவங்களால் இறுகிய ஆனால் பாசத்தால் இளகி வெளுத்த உள்ளம் என்பதை அரைமணிநேரப் பேச்சு உணர்த்தியது. இதுபோன்ற பரிச்சயம் இல்லாத, முறைசார் கல்வியறிவு அதிகம் இல்லாத கிராமத்துப் பெண்களிடம் பேச்சு கொடுப்பதில் ஒரு சௌகர்யம். நகர வாழ்க்கையும், ஏதோ கொஞ்சம் கல்வியும் நமக்குப் புதியவர்களைப் பொதுவாக சந்தேகத்துடனேயே பார்க்கும் நிலையைத் தந்து விடுகிறது. ஆனால் என்னைப் பொருத்தவரை அவர்களிடம் முன்விதிகள் இல்லாமல் பேசலாமே என்ற நினைப்பே மேலிடும். அத்தோடு ஓஹோ, அப்படியா என்ற சிற்சில வார்த்தைகளிலேயே மனம் திறந்து மடை திறந்தது போல் கொட்டுவார்கள் இவர்கள். என்போன்ற பேச்சுத் திறமை அதிகம் இல்லாதவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம். 


அவரது கதைக்கு வருகிறேன். அவருக்கு எழுபது வயதுக்குக் குறையாமல் இருக்கும். கணவருடன் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை நரகம். குடித்துவிட்டு அடித்ததில் முன்பற்கள் உடைந்து  உதடுகள் கீறியதன் வடு நாற்பத்திரண்டு வருடம் கழிந்து இன்றும் தெரிகிறது. கணவன் போனபோது கையில் குழந்தை. அரவணைக்க இரண்டு சகோதரர்கள் இருந்தும் முழுவதும் அவர்களைச் சார்ந்து இருக்க விரும்பாமல் கட்டிடப்பணி, சாலை போடும் பணியிடங்களில் சிற்றாள் வேலை பார்த்தார். மகனைப் படிக்க வைக்க முயற்சித்தார். அவனுக்குப் படிப்பு வரவில்லை. இருந்தாலும் அவனை நல்ல மனிதனாக வளர்த்து ஆளாக்கினார். அவன் இப்போது கட்டிடப் பணியில் காலூன்றி வளமாக இருக்கிறான். மகனுக்கு மணம் முடித்து பேரன் பேத்திகளிடமும் அன்பாக இருக்கிறார் மூதாட்டி. மூத்த பேத்தி நன்கு படித்து மும்பையில் வேலையில் இருக்கிறாள். தாய்வழிப் பாட்டியைவிட நான் கண்டிப்பானவள் என்று தெரிந்தாலும் என்னிடம் அவர்களுக்குப் பிரியம் அதிகம் என்று உருகுகிறார். மருமகளும் அதேமாதிரி என்கிறார். அண்ணன்களும் அவர்கள் மனைவிகளும் அதுபோலவே என்கிறார். குறையேதும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்று வாழ்ந்து காட்டுகிறார்.


இப்போதைய தனிமைப் பயணம் எதற்கு என்றதில் ஆரம்பித்தது இந்தக் கதைகள் எல்லாம். கோவில்பட்டியிலிருந்து ஐம்பது கிமீ தொலைவிலுள்ள சிறிய கிராமத்திலிருந்து வருகிறார். கல்லிடைக்குறிச்சியில் மாமா இருந்தார்கள். இவருக்கு அங்கு கொஞ்சம் நிலம் இருக்கிறது. மாமாவிற்குப் பங்குள்ள நிலம். மாமா இறந்து இருபது ஆண்டுகள் ஆகிறது. பத்திரத்தில் அவரது பெயரும் இருக்கிறது. அவர் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டியதையெல்லாம் கொடுத்தாயிற்று. இருந்தாலும் பெயர் இருப்பதால் மரண சர்டிபிகேட் வாங்கி பத்திரத்தில் பெயர் விடுவிக்க வேண்டும். அங்கே உள்ள சித்தப்பா மகன் தேவையான உதவிகள் செய்வான். இருந்தாலும் நான் நேரில் போக வேண்டாமா. எனக்குப்பிறகு மகனுக்கு பிரச்சினை வரக்கூடாதே. அவனுக்கு அவர்களை அதிகம் பழக்கமில்லை. நேரமும் இல்லை. எனவேதான் இந்தப் பயணம். தனியாகப் போவது புதியதல்ல. பயமும் இல்லை என்கிறார். இவ்வளவு பாசத்துடன் இருப்பவரிடம் குடும்பத்தினர் அன்பாக இருப்பதில் என்ன ஆச்சர்யம்.

ஒரு சாதனையாளரை சந்தித்த நிறைவுடன் பத்தமடையில் இறங்கினேன். 


இவரைப் போன்றவர்கள் தானே மகளிர் தினத்தில் நினைவுகூர வேண்டியவர்கள்.